10,000 மாணவர்களுக்கு ஆப்சென்ட் விவகாரம் : "அனைத்து விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும்" - அமைச்சர் திட்டவட்டம்
ஆன்லைன் மூலம் நடைபெற்ற பொறியியல் செமஸ்டர் தேர்வில், தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த 10ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்செண்ட் போடுமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அனைத்து விடைத்தாள்களும் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் தொடங்கி, மார்ச் 12-ந் தேதிவரை ஆன்லைனில் நடைபெற்ற நிலையில், காலை ஒன்பதரை மணியில் இருந்து பகல் 12.30 மணி வரை தேர்வு எழுத கால அவகாசம் வழங்கப்பட்டது.
தேர்வு முடிந்ததும் உடனடியாக வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இணையதள கோளாறு, மின்வெட்டு உள்ளிட்டவற்றையை கருத்தில் கொண்டு விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த கால அவகாசத்திற்குள் பதிவேற்றம் செய்யாத விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இதனை மறுத்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தாமதமாக பதிவேற்றம் செய்தவர்களின் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Comments